No products in the cart.
அமெரிக்காவின் வரி விதிப்பு – அரசாங்கத்தின் மீது கேள்விகளைத் தொடுத்த சஜித்
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் தீர்வை வரி விதிப்பை அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த வரி விகித மாற்றங்களால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நான் இந்த நாடாளுமன்றத்தில் 19.02.2025 ஆம் திகதி கேள்வி எழுப்பியிருந்தேன். எவ்வாறாயினும், இந்த விடயத்தில் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே செயலற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அண்மையில் இலங்கை ஏற்றுமதிகளிக்கு 44% பரஸ்பர வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் தமது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் மீது பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் அடுக்கியிருந்தார்.
அவர் எழுப்பிய கேள்விகள் வருமாறு,
01. அமெரிக்க செனட் சபையில் இலங்கைக் நட்புறவுச் சங்கம் (Sri Lanka Caucus) அமைந்து காணப்படுகிறதா?
02. ஆம் என்றால், செனட் சபையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? அந்த உறுப்பினர்கள் யாவர்? அந்த உறுப்பினர்கள் எந்த மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்?
03. அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் (House of Representative) இலங்கை-அமெரிக்கா நட்புறவுச் சங்கம் (Sri Lanka Caucus) அமைந்து காணப்படுகின்றதா?
இந்த செனட் சபை பிரதிநிதிகளுக்கும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கும் காணப்படும் தங்களது அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த வரிகளைக் குறைப்பது தொடர்பாக சில முன்னேற்றங்களைச் செய்யலாம்.
தற்போது, குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் இணைந்து செனட் சபை ஊடாக இந்த வரிகள் தொடர்பாக சட்டமொன்றைக் கொண்டு வர தயாராகி வருவதனால், இந்த உறுப்பினர்களோடு அவசர கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
04. ஆம் என்றால், பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகிப்போர்களினது எண்ணிக்கை யாது? அந்த உறுப்பினர்களின் பெயர்கள் யாது? அவர்கள் எந்த மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்?
05. இந்த நட்புறவுச் சங்கங்களின் உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு நமது நாட்டின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 44% வரிவிதிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
06. 2025.03.15 ஆம் திகதி அன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி, தற்போது நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழு பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் நாட்டின் சார்பில் என்ன முன்னேற்றங்களுக்கு வந்துள்ளனர்?
07. இந்தக் குழுவினர் அமெரிக்காவிற்குச் சென்று, இப்பிரச்சினைக்கு தீர்வு காண என்ன பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்? எந்தெந்த நிறுவனங்களோடும், எந்தெந்த நபர்களோடும், எந்தெந்த குழுக்களுடனும் இந்த கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்? இதன் முன்னேற்றம் யாது?
08. இந்த வரிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கத்திடம் காணப்படும் திட்டம் என்ன? இது தொடர்பான விடயங்களை இந்த பாராளுமன்றத்தில் முன்வைப்பீர்களா?
09. இந்தப் பிரச்சினைக்கு குறுகிய, மத்திய கால மற்றும் நீண்ட கால தீர்வாக ஏற்றுமதி ஸ்தானங்களைப் பல்வகைப்படுத்த அரசாங்கம் நடைமுறை ரீதியாக என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன ?
10. நாட்டிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது?
11. எந்த வகையிலேனும் இந்த வரிகளால் நாட்டின் ஏற்றுமதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்புகள் ஏற்படுமாயின் 2028 IMF வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் இணக்கப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா?
இந்த வரிகளால் 2028 இல் கடனை திருப்பிச் செல்லுத்தும் நடவடிக்கைகளில் சிக்கல்களை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய தூதுக்குழுவின் தலைவரை நேற்று சந்தித்த போது தெரிவித்தேன். எனவே அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை சந்தித்து, ஏதேனும் தீர்வை எட்டிக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.