இலங்கை

8 இலட்சம் பேர் மட்டுமே வரி செலுத்த தகுதி!

சுமார் 8 மில்லியன் பேர் ஊழியப் படையில் இருந்தபோதும், சுமார் 800,000 பேர் மட்டுமே வரி வலையின் கீழ் வருவது ஏன் என்று அரசாங்க நிதி பற்றிய குழு கேள்வி எழுப்பியது.

தற்போதைய முறைமையில் அண்ணளவான 8 மில்லியன் பேரில் சுமார் 800,000 பேர் மட்டுமே வரி செலுத்தும் எல்லைக்குள் தகுதியுடையகின்றனர் என்று நிதி அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பிரதி அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தெரிவித்தனர்.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை சட்டத்தை நிறுத்துவதற்கான, உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலத்தைப் பரிசீலனை செய்யும் நோக்கில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் மார்ச் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

தனிநபர் வருமான வரிக்கான (PIT) விடுப்பை ஆண்டுக்கு 1,200,000 ரூபாவிலிருந்து 1,800,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சட்டமூலத்தில் முன்மொழியப்படுகின்றமை கருத்திற்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சட்டமூலம் தனிநபர் வருமான வரிக்கான (PIT) விடுப்பை ஆண்டுக்கு 1,200,000 ரூபாவிலிருந்து 1,800,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழிவதுடன், பந்தயம் மற்றும் சூதாட்டம், மதுபானம் மற்றும் புகையிலையைக் கொண்ட வியாபாரங்களிலிருந்து வருமான வரி அறவிடுதலை 40% இலிருந்து 45% ஆக அதிகரிக்க முன்மொழிகின்றது.

மேலும், சேவை ஏற்றுமதி மீது 15% வருமான வரி மற்றும் வட்டி வருமானத்தின் மீதான நிறுத்திவைத்தல் வரியை [Withholding Tax (WHT)] 5% இலிருந்து 10% ஆக அதிகரிப்பதற்கும் சட்டமூலம் முன்மொழிகின்றது.

உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) தரவுகளின் பகுப்பாய்வை ஆழமாகக் கருத்திற்கொண்ட நிதி பற்றிய குழு, தற்போதைய தரவுகளில் பிழை இருப்பதாக முடிவு செய்தது. அதற்கமைய, துல்லியமான தரவுப் பகுப்பாய்வை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அத்துடன், வரி செலுத்துதல்/ இறக்குமதி செய்தல்/ ஏற்றுமதி செய்தல் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து ஏதேனும் சேவைகளைப் பெறுவதற்கு அவசியமான வரி அடையாள இலக்கம் (TIN) பெறும் செயன்முறை செயலில் இல்லை என்பதும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் வெளிப்பட்டது. செயன்முறையை சுமுகமாக இயக்குவது தொடர்பான நிலைமை குறித்து குழுவிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியது.

பந்தயம் மற்றும் சூதாட்டம், மதுபானம் மற்றும் புகையிலையைக் கொண்ட வியாபாரங்களிலிருந்து வருமான வரி அறவிடுதலை 40 % இலிருந்து 45% ஆக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்திய குழு, சூதாட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சு தவறியமை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சூதாட்ட செயற்பாடுகளிலிருந்து பெறப்பட்ட வருமானம் குறித்து குழுவால் முன்னர் கோரப்பட்ட உரிய தரவுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கத் தவறியமை தொடர்பிலும் குழுவின் தலைவர் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

வரி மேன்முறையீட்டிற்கு 25% செலுத்த வேண்டியிருப்பது குறித்தும் குழு வருகை தந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. மேன்முறையீடு செய்யும்போது வங்கி உத்தரவாதத்திற்குப் பதிலாக கையிருப்பு வைப்புத் தொகையை கோருவது முறையானதா என குழு வினவியது.

அரசாங்கத்துக்கு செலுத்தவேண்டிய வருமானத்தை செலுத்தாமல் தவிர்ப்பதற்கு மேன்முறையீட்டுப் பொறிமுறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதால் வங்கி உத்தரவாதத்திற்குப் பதிலாக கையிருப்பு வைப்புத் தொகை பிரேரிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு, வழக்குகளை நன்கு புரிந்துகொள்ளும் வகையிலான பகுப்பாய்வுத் தரவுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் நிமல் பலிஹேன கலந்துகொண்டனர்.

What's your reaction?

Related Posts

6 அரசியல் கட்சிகளும் 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல்!

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக திங்களன்று 6 அரசியல் கட்சிகளும், 11 சுயாதீன குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி, குருணாகல், பதுளை மற்றும் இரத்திரனபுரி மாவட்டங்களில் 6 அரசியல்…