கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்சான் பெல்லன இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஊடகங்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக ஊடகங்கள் டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்டதாக அவர் உயிரிழக்க முன்னதாகவே அறிக்கை வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு 9.20 அளவில் டேன் பிரியசாத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பின் அநேக ஊடகங்கள் உறுதிப்படுத்தாது டேன் பிரியசாத் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
முந்திக்கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும் என்பதை மட்டுமே ஊடகங்கள் முதன்மைப்படுத்துவதாகவும் ஊடக நெறிகள் பின்பற்றப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
டேன் பிரியசாத் உயிரிழந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க வருகை தந்து கொண்டிருந்த மருத்துவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் ஐந்து நிமிடத்திற்கு ஒரு தடவை அழைப்பினை எடுத்து டேன் இறந்து விட்டாரா இன்னும் இறக்கவில்லையா என கேள்வி எழுப்பியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை காப்பாற்றும் முயற்சிகளுக்கு பெரும் இடையூறாக அமைகிறது என தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் குழுமியதாகத் தெரிவித்துள்ளார்.
டேன் பிரியசாத்திற்கு பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இரவு 11.20 மணியளவில் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் உரிய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரையில் காத்திருக்குமாறு ஊடகங்களிடம் டொக்டர் ருக்சான் பெல்லன கோரிக்கை விடுத்துள்ளார்.