Propack & Agbiz 2025 கண்காட்சியில் ஆழ்ந்த புத்தாக்கங்களை வெளிப்படுத்திய Hayleys Agriculture Profood

கடந்த ஓகஸ்ட் 22 முதல் 24 வரை BMICH வளாகத்தில் “Grow, Innovate, Thrive” (வளர்ச்சி, புத்தாக்கம், முன்னோக்கி செல்லல்) எனும் கருப்பொருளுடன் இடம்பெற்ற Profood, Propack & Agbiz 2025 கண்காட்சியில் Hayleys Agriculture Holdings Limited தனது சிறந்த வெளிப்பாட்டை மேற்கொண்டது. 

நிறுவனத்தின் இவ்வருடத்திற்கான பங்கேற்பானது, விவசாயத்தில் புத்தாக்கத்தை மேம்படுத்தும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், பார்வையாளர்களை கவரக்கக்கூடிய நேரடி அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதில் மின்சார குபோட்டா உழவு இயந்திர VR அனுபவம் முக்கிய இடத்தைப் பெற்றது. இங்கு பங்கேற்பாளர்களால் சேறும் சகதியும் நிறைந்த வயலில் உழவு இயந்திரத்தை ஓட்டும் அனுபவத்தை மெய்நிகர் முறையில் அனுபவிக்க முடிந்தது. இத்திட்டம் அடுத்த தலைமுறை விவசாய ஆர்வலர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இது விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தீர்வுகளில் ஹேலிஸ் நிறுவனம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது. 

Sunfrost (Pvt) Limited நிறுவனம் மூலம், “கொவிஅருண” வர்த்தகநாமத்தில் அமைந்த ஆரோக்கியம் சார்ந்த தாவர அடிப்படையிலான தயாரிப்புகளை சுவைத்துப் பார்ப்பதற்கான நிலையமும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. முன்னணி சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் வளர்ச்சியடைந்து வரும் இப்பொருட்கள் வரிசையில், சங்குப்பூ (Butterfly Pea Flower) மற்றம் முருங்கை இலை மா கொண்டு தயாரிக்கப்பட்ட தேங்காய் ரொட்டி மற்றும் இடியப்பம், மசாலா சுவையூட்டப்பட்ட இனிப்பு சோளம் (Sweet Corn Cups), சைவ பேர்கர் பட்டீஸ், இனிப்பு சோள நகெட்ஸ் (Sweet Corn Nuggets) நிலக்கடலை பட்டர் போன்றவற்றை ருசிக்கும் வாய்ப்பை பார்வையாளர்கள் பெற்றனர். இவை அனைத்தும், உலகளாவிய நுகர்வோரின் கேள்விக்கு ஏற்ப, நிலைபேறான தன்மை கொண்ட மற்றும் சைவம் சார்ந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்குவது தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலித்தன. 

நிறுவனத்தின் கால்நடை ஆரோக்கியப் பிரிவானது, செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள் பராமரிப்புகளுக்கான தயாரிப்புகள், உணவுகள் மற்றும் “Total Aflatoxin ELISA Test Kit” மற்றும் “Solus Salmonella ELISA Test Kit” போன்ற முன்னேற்றகரமான சோதனைக் கருவிகளை காட்சிப்படுத்தியிருந்தது. இது விவசாய பெறுமதிச்சங்கிலி முழுவதும் உணவுப் பாதுகாப்பையும் தர உறுதியையும் வழங்குவதில் ஹேலிஸ் நிறுவனம் கொண்டுள்ள பங்கினை எடுத்துக் காட்டியிருந்தன. 

விவசாய உபகரணங்கள், கால்நடை ஆரோக்கியம், சூழல் முகாமைத்துவ சேவைகள், நில முகாமைத்துவ தீர்வுகள், பயிர்ப் பாதுகாப்பு மற்றும் நடுகைப் பொருட்கள், உரங்கள், உள்நாட்டுக்கான மற்றும் ஏற்றுமதிக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகள் மற்றும் Hayleys Agriculture நிறுவனத்தின் பரந்துபட்ட விவசாய செயற்பாடுகளை இக்கண்காட்சியானது வெளிப்படுத்தியது. நிறுவனத்தின் இத்தகைய பிரிவுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதிலும் அதனை வலுப்படுத்துவதிலும் ஹேலிஸ் நிறுவனம் முக்கிய பங்குதாரர் என்பதை வலியுறுத்துகின்றன. 

Hayleys Agriculture Holdings Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி ஜயந்தி தர்மசேன இது குறித்து தெரிவிக்கையில், “விவசாயம் எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கலிலும் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் ஊடாகவும் முன்னேறுகிறது என்பதை, எமது பங்குதாரர்கள் மற்றும் நுகர்வோருக்கு நேரடியாக அனுபவிக்கச் செய்வதே எமது இவ்வருட குறிக்கோளாகும். இயந்திரமயமாக்கல் முதல் முன்னோடியான பரிசோதனை தீர்வுகள், நிலைபேறான புத்தாக்க உணவு கண்டுபிடிப்புகள் வரை, இலங்கையின் விவசாயத் துறை வளர்ச்சி அடையவும், புத்தாக்கம் அடையவும், முன்னேறவும் அவசியமான சூழலை உருவாக்குவதற்கு நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.” என்றார். 

டிஜிட்டல் மாற்றம், நிலைபேறான உற்பத்தி புத்தாக்கம் மற்றும் நுகர்வோர் ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கையின் விவசாயத் துறையை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்யும் பணி தொடர்பான தமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இக்கண்காட்சியில் Hayleys Agriculture நிறுவனம் வெளிப்படுத்தியது.

Exit mobile version