தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (08) காலை சென்னை திரும்பினர்.
“ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 15,516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் வெளிநாடு பயணம் முடித்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து முதலீடுகளை ஈர்த்தது குறித்து சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது,
“மன நிறைவோடு திரும்பி இருக்கிறேன். வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 15,516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன”என்றார்.
இந்த பயணத்திற்காக சிறப்பாக ஒருங்கிணைந்த தொழில்துறை அமைச்சர் மற்றும் உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.
“வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாகத்தான் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்தது பெருமை எனவும் முதலீடுகளை ஈர்க்க சென்ற முதலமைச்சராக மட்டுமல்லாமல், திராவிட இயக்கத் தலைவராக, பெரியாரின் பேரனாக, தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் மறக்க முடியாததாக அமைந்துள்ளது. சிலரால் இதை பொறுக்க முடியவில்லை” எனவும் எதிர்க்கட்சிகளை முதல்வர் விமர்சித்தார்.
“தமிழ்நாடு கொண்டிருக்கக் கூடிய மனிதவளம், உள் கட்டமைப்பு, சலுகைகள், வெளிப்படையான அரசு நிர்வாகம் இப்படியான தகவல்களை முதலமைச்சராக நானே எடுத்து சொல்கிறேன். வெளிநாட்டுப் பயணங்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்து வந்திருக்கிறேன். மௌனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் அதையும் மீறி முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறோம்.” என்றார்.
அதிமுக செங்கோட்டையின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறித்தான கேள்விக்கு, ஆக்கப்பூர்வமாக பேசிக் கொண்டிருக்கிறோம் அக்கப்போரான விசயங்களை பற்றி பேச வேண்டாம் எனவும் முதல்வர் பதிலளித்தார்.
முன்னதாக, இந்த பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் தன்னை கவனித்துக்கொண்ட தமிழ் புலம்பெயர் சமூகத்திற்கு அன்பை நன்றியாக செலுத்துவதாகவும் முதலமைச்சர் பதிவிட்டிருந்தார்.
15,516 கோடி ரூபா முதலீடுகள்
