கொமர்ஷல் வங்கியானது அண்மையில் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ‘Pay Digital Dambulla’ ஊக்குவிப்புப் பிரசாரத்தில் ஞசு-அடிப்படையிலான நிதிப் பரிவர்த்தனைகளை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றதன் மூலம். டிஜிட்டல் கொடுப்பனவுகளில் முன்னோடியாகவும், மற்றும் இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நாடளாவிய ரீதியிலான QR கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் முயற்சியின் உந்து சக்திகளில் ஒன்றாகவும் தனது நிலைகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் மிகவும் பரபரப்பான மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் ஒன்றாகத் திகழும் தம்புள்ளை பிரத்தியேக பொருளாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த ஊக்குவிப்புப் பிரசாரமானது, கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறப் பகுதிகளில் பணமில்லாத பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. நாடு முழுவதிலுமிருந்து வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் அதிகளவு வர்த்தக செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் இடமான தம்புள்ளையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கொமர்ஷல் வங்கியானது,இந்தப் பகுதியில் நிகழ்விற்கு முன்னதான தீவிரமான முன்னாயத்த நடவடிக்கைகளை வர்த்தகர்களுடன் மேற்கொண்டது.
வங்கியின் இந்த அடிப்படைப் பணியின் விளைவாக, தம்புள்ளை வர்த்தகர்கள் பலர் LANKAQR, Visa QR, MasterCard QR, UnionPay QR, WeChat Pay QR, Alipay QR மற்றும் இந்தியாவின் UPI QR வழியாக பணம் செலுத்துவதை எவ்வித தடையுமின்றி ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்தனர். இது அவர்களுக்கு நாட்டின் மிகவும் பரந்தளவிலான QR பரிவர்த்தனைகளின் அணுகலுக்கான இயலுமையை வழங்கியது. கொமர்ஷல் வங்கியானது இந்த அணுகலை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இந்த ஊக்குவிப்பு பிரசாரத்தின் போது பிரத்தியேக சலுகைகளையும் அறிமுகப்படுத்தியது, இதில் வாடிக்கையாளர்களுக்கு 25% வரையிலான விலைக்கழிவுகள் மற்றும் தொடர்ச்சியான QR பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட வர்த்தக வெகுமதி திட்டங்கள் என்பனவும் அடங்கும்.
இந்த நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மேலும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், சர்வதேசக் கொடுப்பனவு வலையமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நிதித்துறையின் முக்கிய பங்குதாரர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த தேசியரீதியிலான முயற்சியில் மத்திய வங்கியுடன் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதில் நாம் பெருமை கொள்கிறோம், என்று கொமர்ஷல் வங்கியின் Card Center இன் பிரதான முகாமையாளர் திரு. சீவலி விக்ரமசிங்க கூறினார். எமது வங்கியானது டிஜிட்டல் புத்தாக்கங்களில் எப்போதும் முன்னணியில் உள்ளது, இலங்கையில் பணமில்லா பரிவர்த்தனை பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தடையற்ற QR தீர்வுகள் மூலம் மேம்படுத்துவது முக்கியமானது என்று நாம் நம்புகிறோம்.
உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகத் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.