தங்காலையில் போதைப்பொருள் மீட்பு – இருவர் கைது

தங்காலை பகுதியில் மூன்று லொறிகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் இரண்டு மகன்மார்களே இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தங்காலை, சீனிமோதர பகுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (22) காலை கண்டுபிடிக்கப்பட்டன. 

தங்காலை, சீனிமோதரவில் ஒரு பழைய வீட்டை வாங்கிய ஒருவர் அதைச் சுற்றி ஒரு மதிலைக் கட்டி பல நாட்களாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

அந்த வீட்டைப் புனரமைக்கும் பணிகளுக்கு 3 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து வீட்டில் மது அருந்தியிருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து அவர் தமது பிள்ளைகளுக்கு அறிவித்ததாகவும், அவர்கள் வந்து அந்த நபரை தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. 

உயிரிழந்தவர் தங்காலை பகுதியைச் சேர்ந்த விதாரந்தெனியவைச் சேர்ந்த 50 வயதுடைய துசித குமார என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபரின் இரண்டு பிள்ளைகளே இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களின் தந்தையின் மரணம் குறித்து சந்தேகநபர்கள் தங்காலை பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் அந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வீட்டிற்குச் நேற்று சென்றிருந்தனர். 

அந்த வீட்டின் ஒரு அறையில் மேலும் இரண்டு சடலங்கள் இருந்தமை கண்டறியப்பட்டிருந்ததுடன் அங்கு 3 லொறிகளில் இருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. 

அத்துடன் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே லொறிகளின் மூன்று சாரதிகளும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version