கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் பெரும்பாலானோர் உணவகங்களில் சாப்பிடுவதைக் குறைத்து, வீட்டிலேயே உணவருந்தும் நிலை அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ரெஸ்டுரன்ட் கனடா நிறுவனம் வெளியிட்ட அண்மைய அறிக்கையின் படி, கனேடியர்களில் 75% பேர் உணவகங்களுக்கு செல்வதை குறைத்துள்ளனர்.
குறிப்பாக 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 81% பேர் உணவகச் செலவை குறைத்து வீட்டில் உணவுண்பதையே விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டை விட சில முன்னேற்றங்கள் இருந்தாலும், வாழ்க்கைச் செலவு நெருக்கடி தொடர்ந்து நிலவுகிறது. அதேவேளை, உணவகங்களின் செயல்பாட்டு செலவுகள் உயர்வதால், அவர்களின் லாப விகிதமும் பாதிக்கப்படுகிறது,” என ரெஸ்டுரன்ட் கனடா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஹிகின்சன் கூறியுள்ளார்.
2019இல், ஒருவரின் வருடாந்திர சராசரி செலவு முழுமையான சேவை உணவகங்களில் 1,165 டொலராக இருந்ததுடன், விரைவு உணவகங்களில் 1,150 டொலராக இருந்தது.
ஆனால் இவ்வாண்டு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, கனேடியர்கள் விரைவு உணவகங்களில் 1,135 டொலர்களை செலவிட, முழுமையான சேவை உணவகங்களில் 1,035 டொலர்களை மட்டுமே செலவிடுகின்றனர்.
மேலும், 65 வீதமான கனேடியர்கள் மாதத்திற்கு குறைந்தது ஒருமுறை வழக்கமான பிரதான வேளை உணவுக்கு பதிலாக சிற்றுண்டியையே எடுத்துக்கொள்கிறார்கள் என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.