ஐரோப்பிய நாடான பிரான்சில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அந்நாட்டு அரசு பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
பல சமூக நல திட்டங்களை முடக்குவது போன்ற செலவு குறைப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
இது குறைந்த மற்றும் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, பிரான்சில் உள்ள பிரதான தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த 2 ஆம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
பிரான்ஸ் அரசு பொது சேவைகளுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இதற்கு பதிலாக பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த வேலை நிறுத்தத்தால் பிரான்ஸ் முழுதும் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இதனால் பொது போக்குவரத்து சேவைகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிற சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்நிலையில், போராட்டங்களின் எதிரொலியாக, பாரிசில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் டவர் மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.