DFCC வங்கி தனது வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிரதான டிஜிட்டல் வங்கிச்சேவைத் தளமான DFCC iConnect 2.0 ஆனது ஏற்கனவே இலங்கையில் வணிகங்கள் தமது நிதிச் செயல்பாடுகளை நிர்வகிக்கும் வழிமுறையில் பரிணாம மாற்றத்தை ஆரம்பித்துள்ளது. இது அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதலாக, வங்கிச்சேவை மற்றும் வாணிபம் ஆகியவற்றை எளிமைப்படுத்துவதில் முன்னோடி என்ற DFCC வங்கியின் வகிபாகத்தை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், வர்த்தக நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தனித்த, பாதுகாப்பான டிஜிட்டல் வழிமுறை மூலமாக வாணிபம், கொடுப்பனவுகள், மற்றும் வழங்கல் சங்கிலிகள் ஆகியவற்றை நிர்வகிப்பதற்கு இடமளிக்கின்றது.
iConnect 2.0 ஆனது வழக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவை என்பதற்கும் அப்பாற்பட்டது. இது பண முகாமைத்துவம், வாணிப தீர்வுகள், வழங்கல் சங்கிலி நிதி வசதி, மற்றும் API ஒருங்கிணைப்புக்கள் ஆகிய அனைத்தையும் ஒரே தளத்தில் திரட்டுகின்ற மூலோபாய ரீதியான இடமளிப்புச் சேவையாகும். நிகழ்நேர இணைப்புத்திறன், நாடளாவிய சேகரிப்புத் தீர்வுகள், மற்றும் தன்னியக்கமயமாக்கப்பட்ட சரிபார்ப்பு இணக்க செயல்முறை ஆகியவற்றுடன், எவ்விதமான சிக்கல்களுமின்றி பணப்புழக்கத்தை மேம்படுத்தி, வழங்குனர்களுடனான உறவுமுறைகளை வலுப்படுத்தி, மற்றும் செயல்பாடுகளை சீரமைக்க வணிகங்களால் முடிகின்றது. DFCC வங்கி பிஎல்சியின் சிரேஷ்ட உப தலைவரும், வர்த்தக வங்கிச்சேவைக்கான தலைமை அதிகாரியுமான சொஹாந்த விஜேசிங்க அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்:
“எமது வாடிக்கையாளர்களுடன் இணைந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் டிஜிட்டல் தளம் தொடர்பான எமது நோக்கத்தை DFCC iConnect 2.0 பிரதிநிதித்துவம் செய்கின்றது. கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவம் முதல், வாணிப நிதி வசதி, வழங்கல் சங்கிலி நிதி வசதி மற்றும் API ஒருங்கிணைப்பு வரை, அனைத்து அம்சங்களும் வணிகங்களுக்கு வேகம், நெகிழ்திறன், மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பணிப்பாய்வுகளை இலகுபடுத்தி, தெரிநிலையை மேம்படுத்தி, மிக வேகமாக பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற நிதிக் கட்டமைப்பின் கீழ் இலங்கை வணிகங்கள் செழிப்பதற்கான தீர்வை வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.”
கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவ அலகானது, CEFTs, SLIPs மற்றும் RTGS கொடுப்பனவுகள் மூலமாக விற்பனையாளர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் மேற்கொள்ள இடமளிக்கும் அதேசமயம், மெய்நிகர் கணக்குகள் மற்றும் பணச் சேகரிப்பு தீர்வானது சரிபார்ப்பு இணக்கச் செயற்பாட்டை இலகுபடுத்துகின்றது. வாணிப நிதி அலகின் மூலமாக, கடன் கடிதங்கள், உத்தரவாத கடிதங்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கடன்கள், மற்றும் பகிரங்க கணக்கிற்கான கொடுப்பனவுகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என்பதுடன், ஆவண தேவைப்பாடு மற்றும் பௌதிக ரீதியாக அவற்றை விநியோகிக்க வேண்டிய சிரமத்தைப் போக்கி, சிக்கலான வாணிப பரிவர்த்தனைகளை விரைவாகவும், மற்றும் கூடியளவு வெளிப்படைத்தன்மையுடனும் நிறைவேற்றிக் கொள்வதற்கு வணிகங்களுக்கு இடமளிக்கின்றது. வழங்கல் சங்கிலி அலகானது, நிறுவனத்தின் மதிப்புச் சங்கிலிக்கு நிதித் தீர்வுகளை திறன்மிக்க வழியில் வழங்கி, பணப்புழக்கத்தை மேம்படுத்தி, தமது தொழிற்படு மூலதனச் சுழற்சிகளை உச்சபட்சமாக நிர்வகிக்க இடமளிக்கின்றது.
API இணைப்புத்திறன் மூலமாக, தன்னியக்கமயமாக்கப்பட்ட நிகழ்நேர பரிவர்த்தனைகள் மற்றும் அறிக்கையிடலுக்கான தங்குதடையற்ற நேரடி இணைப்பை நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
வாடிக்கையாளர் எங்கேயும், எப்போதும் நெகிழ்திறன், திறன் மிக்க வழியில் சரிபார்ப்புக்கள், மற்றும் பாதுகாப்பான வழியில் ஒப்புதல் அங்கீகாரங்கள் ஆகியவற்றை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, தங்குதடையின்றி ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட இணையம், மற்றும் மொபைல் செயலி ஆகியவற்றையும் இத்தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெறுமனே ஒரு தொழில்நுட்ப மேம்பாடு என்பதற்கும் அப்பால், அதிநவீன டிஜிட்டல் ஆற்றல்களையும், மனிதர்களுக்கு முதலிடம் அளிக்கும் சேவை மனப்பாங்கு சார்ந்த விழுமியங்களையும் ஒன்றிணைத்து, தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு DFCC வங்கி சேவைகளை வழங்குகின்றது என்பது குறித்த ஒரு பரிணாம மாற்றமே iConnect 2.0 ஆகும். DFCC வங்கியின் பரந்த மட்டத்திலான டிஜிட்டல் பரிணாம மாற்றத்திற்கான பயணத்தின் ஒரு அங்கமாக, புத்தாக்கமான, உராய்வற்ற, மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற நிதித் தீர்வுகளுடன் இலங்கையில் வர்த்தக நிறுவனங்களுக்கு வலுவூட்டுவதில் வங்கியின் அர்ப்பணிப்பை iConnect 2.0 ன் மீள்அறிமுகம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
DFCC வங்கி குறித்த விபரங்கள்
1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 137 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது.
நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
iConnect 2.0 மூலமாக வணிகங்களுக்கு வலுவூட்டும் DFCC வங்கி: வாணிபம், கொடுப்பனவுகள் மற்றும் வழங்கல் சங்கிலியை எளிமையாக்குகின்றது
