
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் சிறப்புரை நிகழ்த்தினார். உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கைகளில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பரிணாமம் கண்டு வரும் பங்களிப்பைப் பாராட்டிய சஜித் பிரேமதாச, இந்தியாவை “வியூக சுயாட்சியின் மற்றும் தென்-தென் ஒத்துழைப்பின் கலங்கரை விளக்கம் என்று வர்ணித்தார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை எதிர்க்கட்சித் தலைவர் மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தினார். இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான வலயமாக பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார். பூகோளப் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் வர்த்தகம், பாதுகாப்பு முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றத்தை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியா உருவெடுப்பதைச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, அதன் டிஜிட்டல் ஜனநாயகம், தயாரிப்புகள் மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளைப் போஷிப்பதில் கண்டு வரும் வெற்றிகள் தொடர்பிலும் பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக, மின்சார வாகனங்கள் மற்றும் விநியோக சேவைத் துறைகளில் இந்தியாவின் தொழில் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளுடன் இணைவதற்கான இலங்கையின் விருப்பத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். நியாயமான மற்றும் சமநிலையானதொரு உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்க, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நிரந்தர உறுப்புரிமை இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவுக்கு காணப்படும் இயலுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்