விபத்தில் இளைஞன் உட்பட இருவர் மரணம்

கொழும்பு – கண்டி வீதியில், அளுத்கம, போகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். 

கொழும்பு திசையில் இருந்து கண்டி திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, பின்னர் எதிர்த் திசையில் வந்த கார் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 22 வயதுடைய, கட்டுவஸ்கொட, வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

பெம்முல்லைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேநேரம் அநுராதபுரம் – பாதெனிய வீதியில் திவுல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பெண் ஒரிவர் உயிரிழந்தார். 

அநுராதபுரம் திசையில் இருந்து பாதெனிய திசை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரிப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பாதசாரிப் பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் பாதசாரிப் பெண் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் 77 வயதுடைய, கொண்டதெனிய, கட்டுக்கஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரை கைது செய்துள்ள கல்கமுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version