மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு சுமார் 270-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கடந்த வாரம் இருவர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மு. உதயகுமார் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் இப்பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இன்றிலிருந்து தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தி, டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் பிரதான நிகழ்வு, இன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் ப. முருகதாஸின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மு. உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு அணியினர் மற்றும் பொலிஸார் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மழை மற்றும் வெள்ளம் காரணமாக டெங்கு நோய்த் தாக்கத்தைத் தடுக்கும் வகையில், கடந்த வாரம் வீடுகளைச் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்பின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, பொலிஸார், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் இணைந்து வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழலைக் கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சிலருக்கு எதிராக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து சீரற்ற வானிலை நிலவும் காலப்பகுதி என்பதால், சூழலைத் தூய்மைப்படுத்தி நுளம்பு தாக்கத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மு. உதயகுமார் கூறியதாவது:
“சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்புரையின் கீழ் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது பிரதேசம் அதிகளவான டெங்கு தாக்கம் உள்ள பிரதேசம் என்பதாலும், மழைக்குப் பின்னர் பல இடங்கள் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான நிலையைக் கொண்டிருப்பதாலும், அது தொடர்பான விழிப்புணர்வுகள் கடந்த வாரம் முழுவதும் மக்களுக்கு வழங்கப்பட்டன.
இன்றைய தினம் களவிஜயங்களை மேற்கொண்டு டெங்கு தொடர்பான கண்காணிப்புகளைச் செய்து, அவ்வாறான இடங்களை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எமது அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்கள் அல்லது கவனத்தில் கொள்ளாதவர்கள் மற்றும் காணிகளை டெங்கு பரவக்கூடிய இடங்களாக வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மட்டக்களப்பில் தொடர்ச்சியாகவே ஒவ்வொரு மாதமும் டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்த ஆண்டு 270-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டு, அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த வாரம் இரண்டு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மழையின் பின்னர் இந்த எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாகவே இந்நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம்.
மக்கள் தங்கள் வதிவிடங்களில் நுளம்பு குடம்பிகள் உற்பத்தியாகும் இடங்களை உடனடியாகத் தூய்மைப்படுத்தி, எமது செயற்பாடுகள் வெற்றியடைவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். டெங்கின் தாக்கம் அதிகரிக்காத வகையில் மக்களின் பூரண ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்,” என்றார்.
