டித்வாவினால் பாதிக்கப்பட்ட தொழில்களை மீளக் கட்டியெழுப்புவது குறித்து விளக்கம்

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தொழில்துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட முழுமையான நஷ்டத்தை ஈடுசெய்வதற்கு அரசாங்கத்திடம் நேரடிப் பொறிமுறை எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சதுரங்க அபேசிங்க, வீழ்ச்சியடைந்த தொழிற்சாலைகளுக்கு கடன் வசதிகள் மற்றும் கடன் திருப்பிச் செலுத்த கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தொழிற்சாலைகளுக்காக தொழில்துறை அமைச்சு தலையிட்டுள்ளதுடன், குறிப்பாக சுமார் 200 பாரியளவிலான தொழிற்சாலைகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், ஏற்பட்ட நஷ்டத்தை முழுமையாக ஈடுசெய்யக்கூடிய பொறிமுறை இல்லாததால், காப்புறுதி நிறுவனங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குதல், மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்கத் தலையிடுதல் போன்ற பணிகளைத் தொழில்துறை அமைச்சு முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். 

அத்துடன், ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை தற்போது மீண்டும் தமது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன என்றும், ஜனவரி மாதமளவில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version