உக்ரைன் இராணுவத்தின் தொடர் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் பல ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், அண்மையில் உக்ரைனின் வடக்குப் பகுதியில் ரஷ்ய இராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் இராணுவம் ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவை இலக்கு வைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மொஸ்கோவின் வான் பரப்பு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, டோமோடெட்வோ (Domodedovo), வினுகோவா (Vnukovo), ஜூகோவ்ஸ்கி (Zhukovsky), செர்மெட்யோவா (Sheremetyevo) ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த விபரங்களை ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘ரோசாவியாட்சியா’ (Rosaviatsia) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தற்சமயம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
