இலங்கையைத் தாக்கிய மிக மோசமான அனர்த்தமாகக் கருதப்படும் ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் நாட்டுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இன்றுடன் (27) மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன.
இந்த மோசமான அனர்த்தத்தினால் நாட்டில் 650 பேர் உயிரிழந்ததுடன், காணாமல் போன 173 பேரை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் இலங்கைக்கு தெற்கு கடற்பரப்பில் உருவான குறைந்த அழுத்த வலயம், பின்னர் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து நவம்பர் 27 ஆம் திகதி சூறாவளியாக மாறியது. அந்தச் சூறாவளிக்கு “டித்வா” எனப் பெயரிடப்பட்டது.
இந்த டிட்வா சூறாவளியின் தாக்கத்தினால் 24 மணித்தியாலங்களுக்குள் 540 மில்லிமீற்றர் என்ற அதிகூடிய மழைவீழ்ச்சி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியதுடன், நாட்டின் 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களுக்கு இதனால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.
டித்வா சூறாவளியினால் 6,018 வீடுகள் முழுமையாகவும், மேலும் 108,879 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், இன்றும் 41 பாதுகாப்பு நிலையங்களில் 1,150 குடும்பங்கள் தங்கியுள்ளதுடன், வீடுகளை இழந்த மேலும் 43,831 குடும்பங்கள் வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த டித்வா சூறாவளியினால் கட்டிடங்கள் மற்றும் அவற்றிலுள்ள பொருட்கள், விவசாயம் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள நேரடி சேதம் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
எவ்வாறாயினும், டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் நிவாரணத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதுடன், அது தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தத் திட்டத்தின் கீழ், அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், பெப்ரவரி 20 ஆம் திகதியாகும் போது அதன் 98.07 சதவீதமான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட வீடுகளில் மீள்குடியேறுவதற்காக அத்தியாவசிய சமையலறை உபகரணங்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்ய 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், பெப்ரவரி 20 ஆம் திகதியாகும் போது தகுதியுள்ள பயனாளிகளில் 90.75 சதவீதமானோருக்கு அந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.