QR குறியீடு சிக்கல்கள் நாளைக்குள் முழுமையாக தீர்க்கப்படும்!

எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சில மாவட்டங்களில் சாதாரண எரிபொருள் நுகர்வை விட இருமடங்கு நுகர்வு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.


பழைய வாகனத்தை வைத்திருந்து புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் பழைய தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்து புதிய வாகனத்தை வாங்கியவர்கள் QR குறியீட்டைப் பெறுவதில் இன்னும் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், அந்தத் தடைகள் இன்றைய தினத்திற்குள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். எனினும், பழைய வாகனம் மற்றும் பழைய இலக்கம் அல்லது புதிய வாகனம் மற்றும் புதிய இலக்கத்தைக் கொண்டவர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 70 இலட்சம் பேர் QR முறையில் பதிவு செய்திருந்ததாகவும், இம்முறை அந்த எண்ணிக்கை 72 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது வரை சுமார் 55 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பழைய தரவுத்தளத்தில் இருந்த 27 இலட்சம் தரவுகளை ஒவ்வொன்றாக நீக்குவதற்கு சுமார் இரண்டு நாட்கள் தேவைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அமைச்சர் மேலும் கூறுகையில்:


“சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாதாரண விற்பனையை விட இரண்டரை மடங்கு விற்பனை நடைபெறுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவற்றைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது பவுசர்கள் மூலம் விநியோகிப்பதற்கோ போதிய வசதிகள் இல்லை. எனவே, மக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். நாளை காலை முதல் இந்தப் பிரச்சினை முழுமையாகத் தீரும் என நம்புகிறேன்.


இந்த தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவே நாம் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் (ஒற்றை, இரட்டை) அடிப்படையிலான முறையை அறிமுகப்படுத்தினோம். இல்லையெனில் QR முறை மூலமே இதனை முகாமைத்துவம் செய்திருக்க முடியும். முன்னைய காலங்களில் டெண்டர் மோசடிகளால் வாகன இலக்கத் தகடுகள் கிடைக்காதவர்களுக்கு எரிபொருள் பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. வருமான வரி அனுமதிப்பத்திரம், புகைப்பரிசோதனை சான்றிதழ், வாகனப் புத்தகம் அல்லது காப்புறுதிச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து அவர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும். நிலைமை சீரானதும், மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.”

Exit mobile version