யாழ்ப்பாணத்தில் பரபரப்பு – பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவலின்படி, குறித்த காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த காணி தமக்குச் சொந்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறி வரும் நிலையில், மற்றொரு தரப்பும் அதற்கு உரிமை கோரி வருகின்றது.

நேற்றைய தினம், குறித்த காணியை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்த போது, இரு பெண்கள் அங்கு வந்து காணியின் ஒரு பகுதி தமக்குரியது என கூறி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, ஆயுதங்களின்றி கைகளை வீசி பேசிக்கொண்டிருந்த பெண்களை நோக்கி பாராளுமன்ற உறுப்பினர் திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தானது என ஏற்கனவே பல தரப்புகள் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த துப்பாக்கி இதுவரை மீளப் பெறப்படாத நிலையில், இவ்வாறான நிலை தொடர்ந்தால் மேலும் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version