உலகை அச்சுறுத்த வரும் ‘எல் நினோ’ : 2026-ல் மாறப்போகும் காலநிலை

2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து உலகளாவிய வெப்பநிலையும் மழைவீழ்ச்சி முறைமைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ நிலை உருவாகும் சாத்தியம் இருப்பதாக உலக வானிலையியல் அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இந்த நிலைமை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவது இதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரணத்தை விட அதிகரிக்கும் நிகழ்வே எல் நினோ எனப்படுகிறது. இது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் வானிலை அமைப்புகளையும் பாதிக்கக்கூடிய முக்கிய இயற்கை காலநிலை மாற்றமாகும். மே அல்லது ஜூன் மாதங்களில் தொடங்கக்கூடிய இந்த நிலை, அதன் பின்னர் வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வானிலையியல் அமைப்பு கடந்த பெப்ரவரி மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் முதல் மே மாதங்களுக்கு இடையில் எல் நினோ உருவாகும் சாத்தியம் 10% மட்டுமே என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மே மாத இறுதியில் புதிய உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையில் நிலவும் அதிக வெப்பம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று(25) வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் மனித உடல் உணரும் வெப்பச் சுட்டெண் கவனத்திற்கு உரிய அளவில் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version