தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம் – மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை

வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமாக திமுக – அதிமுக என்ற இரு துருவ  அரசியல் போட்டி நிலவிய தமிழ்நாட்டில், இந்த முறை நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாவது சக்தியாகக் களமிறங்கியது.

தேர்தல் பிரச்சாரங்களில் விஜயைக் காண மக்கள் பெருமளவில் திரண்ட காட்சிகள், மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தன.  குறிப்பாக இளைஞர்கள், முதன்முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றோர் மற்றும் மாற்றத்தை விரும்பும்  மக்களிடையே தவெக மீது கணிசமான ஆர்வம் காணப்பட்டது.

ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அந்த வரவேற்பை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. பல கணிப்புகள் தவெக 10 முதல் 40 தொகுதிகள் வரையிலேயே வெற்றி பெறும் நிலையைக் காட்டுகின்றன. இதற்கு மாறாக, INDIA TODAY – AXIS MY INDIA கருத்துக் கணிப்பு மாத்திரம் விஜயின் கட்சி 98  முதல் 120 இடங்கள் கைப்பற்றி ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கணித்துள்ளது.

இந்த முரண்பாடு பல கேள்விகளை எழுப்புகிறது. “பிரசாரங்களில் காணப்பட்ட மக்கள் கூட்டம் உண்மையாகவே வாக்குகளாக மாறியதா? ” “மேடைகளில் தெரிந்த ஆதரவு வாக்குச் சாவடிகளில் தொடர்ந்ததா? ” அல்லது  “அமைதியாகத் தீர்மானிக்கப்பட்ட வாக்காளர்களின் மனநிலையை சில கருத்துக் கணிப்புகள் சரியாகப் பதிவு செய்யத் தவறிவிட்டதா?” என்ற சந்தேகங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 234  தொகுதிகளுக்கும் நடைபெற்றது.  தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 84.69% வாக்குகள் இம்முறை பதிவாகின.

இவ்வாறிருக்க தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் NDTV- PEOPLE’S PULSE திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80  தொகுதிகளும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் தவெக 18 முதல் 24 தொகுதிகளையும் ஏனையவை 2 முதல் 6  இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வரைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என REPUBLIC TV P MARQ கணித்துள்ளது.  அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களையும், தவெக 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும், மற்றயவை 1 முதல் 6 இடங்களை பெறும் எனவும் கணித்துள்ளது.

MATRIZE நடத்தியக் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 தொகுதிகளும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் தவெக 10 முதல் 12 தொகுதிகளிலும், மற்றயவை 1 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என Times Now JVC கணித்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகளிலும்,  திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தவெக 8 முதல் 15 தொகுதிகள் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PEOPLE’S INSIGHT வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 120 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளிலும், தவெக 30 முதல் 40 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்றயவை அதிகபட்சம் 4 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், INDIA TODAY AXIS MY INDIA கருத்துக் கணிப்பில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்களை கைப்பற்றி  தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களையும், அதிமுக கூட்டணி 22 முதல் 32 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கணித்துள்ளது. அதேநேரம் திமுக மற்றும் தவெக ஒருசேர 35 சதவீத வாக்குகளைப் பெறும் என AXIS MY INDIA கணித்துள்ளது. Chanakya Strategies கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 145 முதல் 160 இடங்களையும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளையும்  கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  தவெக 13 முதல் 18 இடங்களிலும், மற்றயவை 5 முதல் 8 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

அக்னி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில், திமுக கூட்டணி 169 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 64 தொகுதிகளிலும்  தவெக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  VOTE VIBE நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 124 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 103 முதல் 113 தொகுதிகளும், தவெக 10 தொகுதிகளும் வெற்றி பெறும் என்றும் VOTE VIBE கணித்துள்ளது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி 39.9 சதவீதமும் திமுக கூட்டணி 38.9 சதவீதமும்  தவெக 15.8 சதவீதமும் பெறும் எனத் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி குறித்த கணிப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கிராமப்புறங்களில்  ஓரளவு செல்வாக்கு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி அதிகபட்சமாக 0 முதல் 6 இடங்கள் வரை மட்டுமே பெற வாய்ப்பு  உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் குறைந்தது 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அது தொங்கு சட்டமன்றமாக அமையும் என்பதையே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அவ்வாறான சூழலில், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கருணாநிதி – ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு உருவான அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் இரண்டாவது சட்டமன்றத் தேர்தலாக இது அமைந்துள்ள நிலையில், இந்த முறை மக்களின் தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் அரசியலில் மக்கள் கூட்டம், சமூக ஊடகத் தாக்கம், நட்சத்திரக் கவர்ச்சி ஆகியவை வெற்றிக்கான ஒரே அளவுகோலாக இருக்க  முடியாது என்பதையும், அதேவேளை பாரம்பரியக் கணக்கீடுகள் புதிய அரசியல் அலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என்பதையும் இந்த தேர்தல் நினைவூட்டுகிறது. விஜயின் தவெக உண்மையில் “அமைதியான அரசியல் எழுச்சியை உருவாக்கியுள்ளதா?” அல்லது “அது வெறும் பிரச்சார வெப்பமா? என்பது வாக்கு எண்ணிக்கையிலேயே தெளிவாகும்.

எதுவாக இருந்தாலும், இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் இரு கட்சி ஆதிக்க அரசியலை சவாலுக்கு உட்படுத்தியத் தேர்தலாகவும், விஜயின் அரசியல்  வருகை கணிப்புகளையும் கணக்குகளையும் குழப்பிய தேர்தலாகவும் வரலாற்றில் பதிவாகும்.

மாற்றம் ஏற்படுமா? அல்லது “தற்போதைய ஆட்சி தொடருமா?“  என்ற இறுதி கேள்விக்கான பதில் மே 4 ஆம் திகதி தெரியவரும்.

Exit mobile version