சட்டவிரோத கைத்துப்பாக்கி விவசாயிடம் இருந்து பறிமுதல்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெருவெளி வயல் பிரதேசத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கியுடன் சித்தாண்டிப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வியாழக்கிழமை (07) இரவு 7.30 மணியளவில் பெருவெளி வயல் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக கொட்டகை ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி (கட்டுத்துப்பாக்கி) ஒன்றினை பொலிஸார் கைப்பற்றினர்.

இச்சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கியையும் இன்று வெள்ளிக்கிழமை (08) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version