உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை, சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைக்காக பெருமளவிலான ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தூதுக்குழுவினர் தற்போது பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன அரச தொலைக்காட்சியின் செய்தியின்படி, இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ட்ரம்புடன் அமெரிக்க அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் குழுவொன்று இணைந்து கொண்டுள்ளது.
அந்தப் பட்டியல் பின்வருமாறு:
மார்கோ ரூபியோ – இராஜாங்கச் செயலாளர் (Secretary of State)
பீட் ஹெக்செத் – பாதுகாப்புச் செயலாளர் (Defense Secretary)
ஜேமிசன் கிரீர் – அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (US Trade Representative)
ஸ்கொட் பெசென்ட் – நிதிச் செயலாளர் (Secretary of Treasury)
சீனத் தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை சீன ஊடகங்கள் இதுவரை வெளியிடவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் பிராந்திய அரசியல் நிலவரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
