தொழிலதிபர் கௌதம் அதானிக்கு எதிராக முன்னாள் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்திருந்த மோசடி வழக்கை, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, வழக்கை கைவிடப்பட்டால் அமெரிக்காவில் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படும் என அதானி தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு, இந்தியாவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு சுமார் 265 மில்லியன் டொலர் (சுமார் ரூ.2,450 கோடி) லஞ்சம் வழங்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
இதுதொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும், அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (SEC) தொடர்ந்த மோசடி வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதானி தரப்பு தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் சட்டக் குழுவில், டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர்களில் ஒருவரும் புகழ்பெற்ற சட்ட நிறுவனமான ‘சல்லிவன் & கிராம்வெல்’ நிறுவனத்தின் இணைத் தலைவருமான ராபர்ட் ஜே. ஜியுஃப்ரா ஜூனியர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வாஷிங்டனில் நடைபெற்ற ஆலோசனையில், அரசுத் தரப்பிடம் வழக்கை முன்னெடுக்க போதிய ஆதாரங்கள் இல்லை என அதானி தரப்பு வாதிட்டதாகவும் கூறப்படுகிறது.
