குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது!

14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” ரக போதைப்பொருளுடன் இரு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் இந்த “குஷ்” போதைப்பொருள் தொகையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முற்பட்ட போதே, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று (18) காலை 9.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், தங்களது இரு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோகிராம் 562 கிராம் “குஷ்” போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஆடைகளுக்கு இடையே நுணுக்கமான முறையில் 28 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

சந்தேகநபர்கள் இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களில் ஒருவர் மதுபானசாலை ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய ஊழியர் எனவும், மற்றைய நபர் 30 வயதுடைய கூலித் தொழிலாளி எனவும் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version