ஈஸ்டர் தாக்குதல் புதிய திருப்பம்! நாமல் ராஜபக்ஷவின் பரபரப்புப் பேட்டி!

2018/2019 காலப்பகுதியில் சிறையில் இருந்த TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ என்பவரைச் சந்திக்கத் தான் சென்றதாகவும், அது எந்த வகையிலும் இரகசியமான ஒன்றல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட  போது, நாமல் ராஜபக்ஷவின் பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததற்குப் பதிலளிக்கும் வகையில் தனது ‘X’ கணக்கில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்துள்ளதாக இன்று (20) தெரிவித்திருந்தார்.

இது குறித்து நாமல் ராஜபக்ஷ இட்டுள்ள ‘X’ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“2018/19 காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் சிறையிலிருந்த போது, நான் அவரைப் பார்க்கச் சென்றது இரகசியமல்ல. உண்மையில், எனது அந்த வருகைகள் குறித்த சிறைச்சாலை அறிக்கைகளைத் தேவைப்படும் எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். அந்த காலத்திலே, அவர் 2015 ஜனாதிபதித் தேர்தலிலும், 2018 உள்ளூராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு எங்களது கூட்டணியின் பங்காளியாக இருந்தார்.

அறியக் கிடைத்துள்ளபடி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காகப் பிரான்ஸ் வரை சென்றுள்ளது. தெளிவாக இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்துப் பாரதூரமான கேள்விகளை எழுப்புகிறது. 


நான் பிள்ளையானைச் சந்திக்கச் சென்றதை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரம் அதிகாரிகள் இவ்வளவு தூரம் பயணித்திருந்தால், அது தெளிவாகப் பொதுப் பணத்தை வீணடிப்பதாகும். நான் அறிந்த வரையில், தற்போது பிள்ளையான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் அல்ல. அப்படியென்றால், அரசாங்கம் இந்த வகையான ஊடகக் காட்சிகளை நடத்தி உண்மையில் யாருக்கு என்ன உணர்த்த முயற்சிக்கிறது?

தேசிய மக்கள் சக்தியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்துப் பல்வேறு கதைகளைச் சமூகத்தில் பரப்பியுள்ளது. அரசாங்கம் இப்போது இந்தத் துயரத்தைத் அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதற்காகப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்றால், அது இன்னும் உண்மையான பதில்களையும் நீதியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இழைக்கப்படும் கடுமையான அநீதியாகவே கருதப்படும்.

எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகங்கொடுக்க நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். நிலவும் எந்தவொரு சந்தேகத்தையும் வெளிப்படைத்தன்மையுடன் தீர்த்துக் கொள்வதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

அரசாங்கம் செய்ய வேண்டியது, அரசியல் நாடகங்கள் மற்றும் ஊடகத் தலைப்புச் செய்திகள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நமது நாட்டு மக்களுக்காக அர்த்தமுள்ள முடிவுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தனது கவனத்தைச் செலுத்துவதாகும்.”

Exit mobile version