இஸ்ரேல்-ஹிஸ்புல்லா தாக்குதல்களை நிறுத்த இணக்கம்


அமெரிக்காவின் திட்டத்திற்கு அமைய, இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த ஹிஸ்புல்லா அமைப்பு இணங்கியுள்ளதாகவும், அதற்குப் பதிலாக லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல்களை நடத்தாதிருக்க இஸ்ரேல் இணங்கியுள்ளதாகவும் லெபனான் தெரிவித்துள்ளது. 

“தாக்குதல்களை பரஸ்பரம் நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்த முடிகிறது” என்று அமெரிக்காவில் உள்ள லெபனான் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. 

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், “ஹிஸ்புல்லா அமைப்பு எங்கள் நகரங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதை நிறுத்தவில்லை என்றால், பெய்ரூட் மீதான தாக்குதல்கள் தொடரும்” என்று அவர் எச்சரித்துள்ளார். 

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகள், தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஈரான் எச்சரித்திருந்தது. 

இதனைத் தொடர்ந்து, தான் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் அனைவரும் தாக்குதல்களை நிறுத்த இணங்கியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்தே மேற்கூறிய கருத்துகள் வெளியாகியுள்ளன. 

இருப்பினும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் திட்டமிட்டபடி தெற்கு லெபனானில் தமது நடவடிக்கைகளைத் தொடரும் என்று பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த பின்னரும் சில மோதல்கள் நீடித்தன. வடக்கு இஸ்ரேலிய கிராமங்களுக்கு அருகே இருந்த இஸ்ரேலிய தாங்கிகள் மற்றும் படைவீரர்கள் மீது, ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி மூன்று தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால், அமெரிக்காவுடன் ஈரான் நடத்தும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த வாய்ப்புள்ளதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு ஆதரவான அந்த செய்தி நிறுவனம், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் செங்கடலின் நுழைவாயிலான ‘பாப் அல்-மாண்டேப்’ நீரிணையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும் என்றும் கூறியுள்ளது. 

எனினும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் “மிக வேகமான” நிலையில் இருப்பதாகவும், நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தான் பேசியதாகவும் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்தம் ஏப்ரல் 8 அன்று நடைமுறைக்கு வந்த போதிலும், அது போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறிவிட்டது. மூன்று மாதங்களாக நீடிக்கும் இந்த யுத்தத்தினால் ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ளன. உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பொதுவாக இந்த நீரிணை ஊடாகவே செல்கிறது. 

வொஷிங்டனும் தெஹ்ரானும் நிலையான ஒப்பந்தத்திற்கு நெருக்கமாக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அண்மைய நாட்களாகத் திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

Exit mobile version