கண்டி – கலஹா பிரதான வீதியின், கலஹாகுரூப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கலஹாவில் உள்ள சண்முகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது மகனை, தந்தை ஒருவர் முச்சக்கரவண்டியில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போதே இந்த பாரிய பைனஸ் மரம் முச்சக்கரவண்டியின் மீது முறிந்து விழுந்துள்ளது.
எனினும், இதில் பயணித்த தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இப்பிரதான வீதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவமொன்று பதிவாகியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பிரதான வீதிக்கு அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்றித் தருமாறு உரிய அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
