பாரிய பேரழிவை தடுக்க முன் ஆயத்தங்களை செய்யுங்கள்!

எல் நினோ (El Niño), லா நினா (La Niña) நிலைமைகளின் கீழ் கடுமையான வறட்சியான காலநிலை மற்றும் அதன் பின்னர் ஏற்படும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என்றும், இது குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் தனியான குழுவொன்றை நியமித்துள்ளதாகக் கூறினாலும் அது போதுமானதாக இல்லை என்பதால், இப்பேரழிவுகளைத் தடுப்பதற்கான முன் ஆயத்தமாக ஜனாதிபதி செயலணி ஒன்றை உடனடியாக நிறுவ வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

எல் நினோ, லா நினா காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் துறை சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இன்று (24) பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார். 

இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு தற்போதைய அனர்த்த முகாமை செயல்முறை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதால், இதற்கான அவசர தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சியும் தனது பங்களிப்பை வழங்கும் என்றும், இது கட்சி, இனம், மதம், சாதி, வகுப்பு வாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தேசியப் பிரச்சினை என்பதால், இந்த அபாயத்திற்கு எதிராக முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

இந்த அரசாங்கம் விவசாயியை முற்றாக நிர்க்கதியாக்கியுள்ளது. தரமற்ற விதைகள், உர மானியம் முறையாகக் கிடைக்காமை, விவசாய உபகரணங்களின் விலை அதிகரிப்பு மற்றும் யானை-மனித மோதல் போன்ற பிரச்சினைகளால் ஒட்டுமொத்த விவசாய மக்களும் எல்லையற்ற அழுத்தங்களுக்கும் அசெளகரியங்களுக்கும் முகங்கொடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 

தேர்தல் காலத்தில் வயலில் இறங்கி ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் தருவதாக உறுதியளித்த போதிலும், தற்போதைய அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் இன்று விவசாயிகளை நிர்க்கதியாக்கி வருவதாகவும், தேர்தல் காலத்தில் ‘விவசாயியே தெய்வம்’ என்று கூறி ஆட்சியைப் பிடித்துவிட்டு, இன்று விவசாயிகளை கசிப்பு வியாபாரிகள் என முத்திரை குத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

சுற்றுச்சூழல் சட்டத்தின் உற்பத்தியாளரின் விரிவான பொறுப்புக்குள் நுகர்வோரை உள்ளடக்க வேண்டாம். உற்பத்தியாளரின் விரிவான பொறுப்பைக் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என்றாலும், அதற்குள் நுகர்வோரையும் உள்ளடக்குவது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

நுகர்வோரின் பொறுப்பு முறைகள் குறித்து தனியான பகுதி இருக்க வேண்டும் என்றும், உற்பத்தியாளரின் விரிவான பொறுப்புக்குள் நுகர்வோரை உள்ளடக்குவதன் மூலம், நிறுவனங்கள் தங்களின் பொறுப்புகளில் இருந்து நழுவி, மீழ்சுழற்சி செலவினங்களை மறைமுக வரிகள் மூலம் நுகர்வோர் மீது சுமத்தக்கூடும் என்பதால், அது தனியாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

சூப்பர் மார்க்கெட்டுகள் பொலித்தீன் பைகள் மூலம் மாத்திரம் 50 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டுகின்றன. தற்போது சூப்பர் மார்க்கெட்டுகள் வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் பைகளுக்கு பணம் அறவிடுவதன் மூலம் சுமார் 50 மில்லியன் ரூபா வரை சம்பாதிப்பதாக நீதிமன்ற மனுவொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, சுற்றுச்சூழல் கட்டணங்கள் சூப்பர் மார்க்கெட்டுகளின் நிறுவன இலாபமாக மாறுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

13 ஆவது திருத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் 

அதேபோன்று, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாதுகாக்கப்பட்டு மாகாண சபைகளின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், 13- அல்லது 13+ அல்லாமல், 13 ஆவது திருத்தம் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையின் எல்லை குறித்து தற்போது சட்ட ரீதியான பின்னணி உருவாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் 10 மில்லியன் ரூபா அபராதம் மற்றும் 3 வருட சிறைத்தண்டனை உள்ள போதிலும், பெரிய அளவிலான முதலீட்டாளர்கள்/அபிவிருத்தியாளர்கள் இந்த மதிப்பீட்டு செயல்முறையைத் தவிர்த்துச் செல்ல இடமுண்டு என்பதால், இவ்வாறான ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

30 வருடங்களாகப் பதவி உயர்வு வழங்கப்படாத வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் பதவிகளை உடனடியாக நிரப்புங்கள். வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் பதவிகளுக்கான உள்ளக பதவி உயர்வுகளானது கடந்த 30 வருடங்களாக வழங்கப்படவில்லை. 13 களப் பிராந்தியங்களுக்கு வெறும் 6 உதவிப் பணிப்பாளர்களே உள்ளனர் என்பதால், உடனடியாக உதவிப் பணிப்பாளர் பதவி உயர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். 3500 பன்முகப் பணி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5000 பேர் வனவிலங்குப் பாதுகாப்பை வலுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும், பல தசாப்தங்களாக வனவிலங்குத் துறையில் பணியாற்றிய 800-1200 உத்தியோகத்தர்கள் உள்ளதால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

அத்துடன், வனவிலங்கு வெளிக்கள உத்தியோகத்தர்களின் சம்பளத் தளம் MN1 இலிருந்து PL2 ஆகக் குறைக்கப்பட்டமை மற்றும் 250 தன்னார்வ வழிகாட்டிகளை நிரந்தரமாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார். 

உயர்தர மாணவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவும், சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்கு 24 மாதங்கள் இருக்க வேண்டும். ஆனால், இம்முறை முதற்தடவையாகப் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு 21 மாதங்களே கிடைத்துள்ளன. அதேபோல், இரண்டாம் தடவை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 2024 இல் 198 நாட்களும், 2025 இல் 178 நாட்களும் கிடைத்திருந்த போதிலும், தற்போது வெறும் 131 நாட்களே கிடைத்துள்ளன. இவற்றைக் கருத்திற்கொண்டு அம்மாணவர்களுக்கு ஏதேனும் நியாயமான கால அவகாசத்தை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Exit mobile version