கடுவலையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை

கடுவலை மாநகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட வீதியோரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகராதிபதி ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

குப்பைகளை அள்ளிச் செல்வதற்காகக் கடுவலை மாநகர சபையிலிருந்து சுமார் மூன்று வாரங்களாக எவரும் வரவில்லை எனப் பிரதேசவாசிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நோய் இவ்வளவு வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், பல பகுதிகளில் குப்பை முகாமை செயல்முறை ஸ்தம்பிதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கொழும்பு போன்ற டெங்கு நோய் அதிகளவில் பரவக்கூடிய பகுதிகளில் இந்த நிலைமை தீவிரமாக இருப்பது மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது.

டெங்கு நோய் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைகள் சேரும் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களை அழிக்குமாறும் அவர்கள் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

தங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் நுழைவுப் பாதைகளைத் தூய்மைப்படுத்துவதை மக்கள் செய்ய முடியும் என்றாலும், பெருமளவில் சேரும் குப்பைகளை முகாமை செய்வது அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களாலேயே முடியும்.

இத்தகையதொரு பின்னணியில், டெங்கு நோய் மிகத் தீவிரமாகப் பரவியுள்ள கொழும்பு மாவட்டத்தில் குப்பை முகாமை செயல்முறை முடங்கியிருப்பது மிகவும் அபாயகரமான ஒரு விடயமாகும்.

அத்துடன், மழைக்கால வானிலையுடன் சில இடங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மழைநீருடன் கலக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version