அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் விவகாரத்தில் எல்லா வாய்ப்புகளும் மேசையில் உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நாட்டின் குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க கனடா என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் என உறுதியளித்துள்ளார்.
சார்லட்டவுனில் வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்களின் வருடாந்தக் கூட்டத்தின் இறுதி நாளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடியப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் புதிய வரிகள் அமலுக்கு வரும் முன் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்காவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை அவர் மறுக்கவில்லை.
