நீர் வெறுப்பு நோய் ஒழிப்பு, நாய்கள் பதிவிற்கான புதிய சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

இலங்கையில் நீர் வெறுப்பு நோயை (Rabies) முழுமையாக ஒழித்தல், நாய்களைப் பதிவு செய்தல் மற்றும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பரந்த நோக்கங்களைக் கொண்ட புதிய சட்டமூலம் ஒன்று, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

நாட்டிலிருந்து நீர் வெறுப்பு நோயை முற்றாக ஒழிப்பதற்காக நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதனை முறைப்படுத்துதல், வணிக நோக்கங்களுக்காக நாய்களைப் பெருக்குவதைக் கடுமையாகக் ஒழுங்குபடுத்துதல் மற்றும் நாய்களைப் பதிவு செய்வதற்கான முறையான அமைப்பை உருவாக்குதல் என்பன இப்புதிய சட்டமூலத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன. 

மேலும், நீர் வெறுப்பு நோயை ஒழிப்பதற்கான தேசிய ஆலோசனைக் குழு மற்றும் பிரதேச ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் அடங்குகின்றன. 

இதன்போது (476 ஆம் அதிகாரமான) நீர் வெறுப்பு நோய் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் (477 ஆம் அதிகாரமான) நாய்கள் பதிவு தொடர்பான கட்டளைச் சட்டம் ஆகிய பழமையான சட்டங்கள் நீக்கப்படவுள்ளன. 

அத்துடன், இது தொடர்பான அல்லது இதனுடன் இணைந்த விடயங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கான சட்டமூலமாகவும் இது அமைந்துள்ளது. 

இச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை (25) இடம்பெறவுள்ளது.

Exit mobile version