இந்திய திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஜொனிதா காந்தி, சமூக வலைத்தளங்களில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவை சேர்ந்த பாடகி ஜொனிதா, தமிழ், தெலுங்கு, இந்தி, என பல்வேறு மொழிகளில் தன் குரலால் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தில் “மெண்டல் மனதில்” பாடல் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த ஜொனிதா இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து ‘செல்லம்மா’, ‘அரபிக்குத்து’ போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தற்போது திரைப்படப் பாடல்களுடன், உலக அளவில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், ஜொனிதா தனக்கு நேர்ந்த சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “ஒருமுறை இன்ஸ்டாகிராமில் என் நண்பர்களின் பதிவுகளை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஸ்டோரியை கண்டேன். அதில் ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து, அதன் பின்னணியில் என் புகைப்படத்தை வைத்திருந்தார். இது எனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது,” என்று அவர் விவரித்தார்.
“இதுபோன்றவர்களை நான் உடனடியாக பிளாக் செய்து விடுவேன். இத்தகைய சம்பவங்களை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்பதால், யாரும் மீது வழக்கு தொடரவில்லை. ஆனால், இவை அனைத்தும் பாலியல் சீண்டல்கள் தான். அதேபோல் பலர் எனக்கு தொல்லை கொடுத்துள்ளனர்,” என்று ஜோனிடா காந்தி தெரிவித்தார்.