முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் சிங்கராஜ வனப்பகுதி வழியாக வீதி அமைத்தது சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) அனுமதியளித்துள்ளது.
சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்கவின் முன்னிலையில் இந்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்திய பின்னர், அதை தொடர போதுமான காரணங்கள் இருப்பதாக தீர்மானித்த நீதியரசர், பின்னர் குறித்த மனுவை விசாரிக்க அனுமதி வழங்கினார்.
அதன்படி, மனுவின் பிரதிவாதிகளான வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, சுற்றுச்சூழல் அமைச்சர், வனவிலங்கு அமைச்சர், முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, உலக பாரம்பரிய தளமாக பெயரிடப்பட்ட சிங்கராஜ வனப்பகுதி ஊடாக வீதியை அமைக்க கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீட்டில் எடுக்கப்பட்ட முடிவு முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கராஜ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்குச் சொந்தமான ஹோட்டல்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அங்கு செல்வதற்கான பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இதுபோன்ற வீதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.