17 சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி அழைக்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.
சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்படும் கட்டணங்களைக் குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் இந்த மனு அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மனோகர டி சில்வா முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதியரசர், மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கூரைகளில் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி உற்பத்தி அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக மின்சார சபையும், லெகோ நிறுவனமும் செலுத்தும் கட்டணங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் தன்னிச்சையாக குறைப்பதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்சார சட்டத்தின்படி, இத்தகைய கட்டணக் குறைப்புக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதி பெறப்பட வேண்டும் என சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், இந்தக் குறைப்புக்கு அந்த ஆணைக்குழுவின் அனுமதி பெறப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், குறித்த கட்டணக் குறைப்பு முடிவை செயல்படுத்த வேண்டாம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்திருந்த போதிலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமைச்சரவை முடிவின் அடிப்படையில் மட்டுமே இவ்வாறு கட்டணங்களைக் குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவு முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், அந்த முடிவை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரியும் மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த மனு விசாரணை முடியும் வரை குறித்த கட்டணக் குறைப்பு முடிவை செயல்படுத்துவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் மேலும் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.