2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு!

தமிழகம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் படிப்பறிவும், எழுத்தறிவுப் பெற்ற மேம்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கியதை கரிமப் பகுப்பாய்வு காலக்கணக்கீடு மூலம் முதன்முதலாக தொல்லியல் துறை உறுதிபடுத்தியுள்ளது. இதனை நூலாக வெளியிட்டும் உலகறியச் செய்தது.

இதனிடையே அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் கோரியிருந்தது. கீழடி தொடர்பாக 982 பக்க அகழாய்வு அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த நிலையில், அதனை வெளியிட இந்திய மத்திய அரசு மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3D முறையில் 2 முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 80% அறிவியல், 20% கலையை பயன்படுத்தி இவை வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொந்தகையில் 800மீ அகழாய்வில் இந்த மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகை பகுதியில் வாழ்ந்த ஆண்கள் 5.7 அடியும், பெண்கள் 5.2 அடி உயரத்திலும் இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பெரும்பாலான எலும்புக்கூடுகள் 50 வயது மனிதர்களுடையவை. DNA பகுப்பாய்வு நடத்தி இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றி அறிய திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version