சென்னை: தமிழ்நாட்டில் நடந்து வரும் கொலைகளை பார்க்கும் போது காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தினந்தோன்றும் கொலைப் பட்டியல் வெளியாவதே திமுகவின் சாதனை என்று விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் கட்டப் பஞ்சாயத்து செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 4 கொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி குற்றம்சாட்டினார். இதன்பின் அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பேச முயற்சித்தோம்.ஆனால் சபாநாயகர் அப்பாவு என் கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. மதுரை அருகே காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவையில் பெண் ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு, ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றை வழிமறித்து ஒருவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்திருக்கிறார். கிட்டத்தட்ட சினிமா பாணியில் நடந்த கொடூரம் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் திமுக நிர்வாகி குமார் கடத்தி செல்லப்பட்டு கொலை என்று ஒவ்வொரு நாளும் கொலைப் பட்டியல் வெளியாகி வருகிறது.
திமுகவின் சாதனையே இந்த கொலைப் பட்டியல் தான். குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல்துறையை கண்டால் அச்சம் இல்லை. காவல்துறை செயலற்று இருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜாகீர் உசேன் உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்த போது, காவல்துறை அவரை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் போது, முதலமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். உங்களுடைய ஆட்சியில் இப்படி நடக்கவில்லையா.. அப்படி நடக்கவில்லையா என்கிறார். அதெல்லாம் நடந்து முடிந்த சம்பவங்கள். கொலைகளை எண்ணிக்கை அடிப்படையிலா ஒப்பிட வேண்டும்.. மக்களின் பாதுகாப்பில் விளையாடக் கூடாது. குற்றம் நடக்காமல் பார்த்து கொள்வதே அரசின் கடமையாகும். தங்கம், வெள்ளி நிலவரத்தை போல் கொலை நிலவரம் வந்துவிடக் கூடாது. சட்டசபையில் இருந்து நாங்கள் பயந்து கொண்டு வெளிநடப்பு செய்யவில்லை. எங்களை பேசுவதற்கு அனுமதிக்காத காரணத்தினால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.