இனப்படுகொலைக்கு செம்மணியே ஒரு சாட்சி- மா.சத்திவேல் தெரிவிப்பு!

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று 29 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும், “மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும். அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர்.

வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர். ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது. செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.

Exit mobile version