ட்ரம்பினால் நெருக்கடிக்குள்ளான இந்திய ஆடை உற்பத்தியாளர்

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் அறிவித்த நிலையில் பின்னல் ஆடைத்துறை உட்பட இந்தியாவின் பல்வேறு ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை சந்தித்துள்ளது. 

குறிப்பாக திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 45,000 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்தநிலையில் 50 சதவீத வரி விதிப்பு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள்-ஏற்றுமதியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. 

இந்த வரி தமிழ்நாட்டின் துணி மற்றும் ஆடைத்துறையை கடுமையாகப் பாதிக்கும். எனவே ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

2025 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 8 பில்லியன் அமெரிக்க ​டொலர், அதாவது 26.8 சதவீதம் பங்களித்துள்ளது. 

2030 ஆம் ஆண்டுக்குள் துணி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 1 லட்சம் கோடி ரூபாயை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. 

ஆனால் தற்போதைய வரி விதிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் அந்த இலக்கை அடைவதை கடினமாகியுள்ளது.

Exit mobile version