உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு கையளிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், உயிர்த்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாகவும் புதிய திசையிலும் முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவில், இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றத்தை கால ஓட்டத்தில் மறைந்து விடாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று உத்தரவாதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.