முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றை திருப்பி அனுப்புவதற்கு குறுகிய கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றை ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி சனத் நந்தித குமநாயக்கஏப்ரல் 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எழுத்துபூர்வ அறிவிப்பை அனுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதி செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி செயலகத்திலிருந்து வரும் அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலாளரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் முன்னர் ஒரு அமைச்சரவை அமைச்சர் பயன்படுத்தக்கூடிய அரசு வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி அலுவலகத்தால் வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்று விரைவில் திருப்பித் தரப்படும் என்று ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.