சினிமா

விஷால் உடன் திருமணம்! திகதியை அறிவித்தார் சாய் தன்ஷிகா!

தமிழ் திரையுலகில் 2004ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” படத்தின் மூலம் விஷால் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து “சண்டகோழி”, “திமிரு”, “தாமிரபரணி” என பல படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 

நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு விஷால் இயக்குனர் அர்ஜுனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து “விஷால் ஃபிலிம் பேக்டரி” என்னும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அதன்மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தார். 

மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் நடிகர் விஷால் பணியாற்றி உள்ளார். விஷாலின் திரைப்படங்களை தாண்டி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிலும் குறிப்பாக அவரது திருமணம் குறித்து அவ்வப்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பல்வேறு வதந்திகள் வெளியாகி ரசிகர்களிடையே பல குழப்பங்களை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என விஷால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா இருவருக்கும் இடையே திருமணம் நடைபெறவிருப்பதாக வெளிப்படையாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தன்னுடைய திருமணம் குறித்து சமீபத்தில் பேசிய விஷால், “நான் முன்னதாக கூறியதுபோல நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட்ட பிறகுதான் எனது திருமணம் நடைபெறும். வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி நடிகர் சங்க கட்டடம் திறக்கப்பட உள்ளது. அதன் பிறகு, ஓகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில் எனது திருமணம் நடைபெறும். ஆம், நான் எனது வாழ்க்கைத்துணையை கண்டுபிடித்துவிட்டேன். இது காதல் திருமணம். விரைவில் இதுகுறித்த விரிவான தகவல்கள் வெளியாகும்” எனக் கூறியிருந்தார். 

விஷாலின் இந்த பேச்சு மீண்டும் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியது. விஷாலின் காதலி யார்? விஷாலின் வருங்கால மனைவி யார்? என்பது போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஷாலின் வருங்கால மனைவி நடிகை சாய் தன்ஷிகா என தகவல் வெளியானது. நடிகை சாய் தன்ஷிகா “பேராண்மை”, “பரதேசி” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். “கபாலி” படத்திலும் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருப்பார். 

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா நடித்துள்ளார். விஷாலும், சாய் தன்ஷிகாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்ததாகவும், முதலில் நட்பாக பேசிய இவர்களிடையே காதல் மலர்ந்ததாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகியது. 

நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா இடையேயான திருமணம் குறித்த தகவல் இணையத்தில் டிரெண்டான நிலையில், விஷால் – தன்ஷிகா ஜோடி திருமணம் என்ற தகவலை உறுதிசெய்துள்ளது. 

சாய் தன்ஷிகா நடித்துள்ள “யோகி டா” திரைப்பட விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்ற நிலையில், நடிகர் விஷாலும் இதில் கலந்துகொண்டார். இத்திரைப்பட விழாவில் நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா ஜோடி திருமணத்தை உறுதிசெய்துள்ளனர். 

விழாவில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, “இந்த மேடை எங்களது திருமண அறிவிப்பு மேடையாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. நாம் நண்பர்களாக இருக்கிறோம் எனவே பேசி வைத்துக் கொண்டோம். ஆனால் அதற்கு முன்பு செய்தி வெளியாகிவிட்டது. இனி மறைக்க எதுவும் இல்லை. நாங்கள் ஓகஸ்ட் 29-ம் திகதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். 15 வருடங்களாக விஷால் அவர்களை எனக்கு தெரியும். எப்போதும் என்னை மரியாதையாக நடத்துவார், பிரச்சனையில் துணை நிற்பார். அவை எல்லாம் எனக்குப் பிடித்தது. சமீபமாக தான் பேச ஆரம்பித்தோம். அவருக்கும் எனக்கும் ஒரு உணர்வு… இது கல்யாணத்த நோக்கித்தான் செல்லும் என தோன்றியது. ஒரு விஷயம் தான், அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். லவ் யூ” என்று நடிகர் விஷாலுடன் திருமணம் என்பதை உறுதிசெய்தார் தன்ஷிகா.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…