No products in the cart.
ஜொன்ஸ்டனின் ஹோட்டலைத் தாக்கியவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மொஹமட் அனஸ் உள்ளிட்ட பத்து பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அதனை 10 – 15 வருடங்களுக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (09) தீர்ப்பளித்தார்.
2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த கோட்டா கோ காமா போராட்டத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் பொல்லுகளுடன் நுழைந்து வளாகத்தையும், நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்களை பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒன்பது பிரதிவாதிகளுக்கு தலா 65,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட ஹோட்டலில் இருந்து மடிக்கணினியைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிக்கு 80,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கின் அபராதம் எவ்வாறு செலுத்தப்பட்டது என்பதை ஆராய ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டார்.