ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தை வரும் 11 ஆம் திகதி அமேசான் பிரைம் நிறுவனம் தங்களுடைய ஓ.டி.டி தளத்தில் வெளியிடுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், சவுபின் சாஹீர் உள்ளிட்டோர் நடித்த கூலி திரைப்படம் கடந்த 14 ஆம் திகதி வெளியானது.
இந்தத் திரைப்படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள் இருந்தது. கூலி திரைப்படம், இந்தியாவில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் பல்வேறு வெளிநாடுகளிலும் வெளியான நிலையில் முதல் நாளே 151 கோடி ரூபாய் வசூலித்து முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையை செய்தது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து விஜயின் லியோ திரைப்படம் செய்த சாதனையை கூலி முறியடித்தது.
தொடர்ந்து உலக அளவில் சுமார் 500 கோடி ரூபாய் அளவில் கூலி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என திரைத்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர். ‘கூலி’ பட்ஜெட் 350 கோடி ரூபா என கூறப்படும் நிலையில், பட்ஜெட்டை கடந்து வசூலில் சாதித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்தது. அத்துடன் படம் திரையரங்கில் வெளியான 28 ஆவது நாள் தங்கள் ஓ.டி.டியில் வெளியிட ஒப்பந்தம் போட்டனர். அதன் அடிப்படையில் செப்டம்பர் 11 ஆம் திகதி கூலி திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியிடுகின்றனர்.