இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த சில மாதங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர்.
அவர்கள் தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். 2027 ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்காக இரு வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், அவர்களுடைய ஃபிட்னஸ் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணி அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த போட்டி தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அவர்கள் 2027 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அவரை உலகக் கிணண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாகவே தலைவராக நியமிக்கலாம் என்று ஆலோசனையில் பி.சி.சி.ஐ இருந்து வருகிறது.
இதன் மூலம் உலக கிண்ண கிரிக்கெட் தொடரை இன்னும் ஆயத்தமாக இந்தியா எதிர்கொள்ளும் என்று பிசிசிஐ நிர்வாகிகள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு வரவிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் மிக முக்கியமான போட்டியாக அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணி தலைவராக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். மேலும், டி20 அணிக்கான துணை தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், 3 ஃபார்மேட்டுக்கும் இணைத்து ஒரே தலைவராக சுப்மன் கில்லை நியமிக்கலாமா என்ற ஆலோசனையிலும் பிசிசிஐ இருந்து வருகிறது.
ஏனென்றால், டி20 தலைவராக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவுக்கு தற்போது 34 வயது ஆகிறது. இதனால், அடுத்த தலைவரை தேர்வு செய்யக்கூடிய பணியில் பிசிசிஐ நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 2027 உலக கிண்ண தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு 40 வயது ஆகி இருக்கும். அதனால், அவருடைய ஃபிட்னஸ் அந்த நேரத்தில் பல கேள்விகளை எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த வீரர் குறித்து BCCI அதிரடி முடிவு!
