ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை உறுதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம் மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்குத் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் தற்போது கலந்து கொண்ட அமைச்சர் விஜித ஹெரத், இன்று (10) உயர் ஸ்தானிகர் டர்க்கை சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது, ​​உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூட்டத் தொடரில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடத்தப்பட்டதாக வௌிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர், இதன்போது விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். 

இலங்கையில் புதிய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும், கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கையாள ஒரு முறையான சுயாதீன விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான வாய்ப்பை இலங்கை இழக்காது என்றும் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை வௌியிட்டதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

Exit mobile version