புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அரசுரிமையை சரியான முறையில் அறவிடாமையால் அரசாங்கத்திற்கு பெருந்தொகையான நிதி இழப்பு ஏற்பட்டிருப்பது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) அண்மையில் தெரியவந்தது.
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த விபரம் வெளியாகியது.
சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்குத்தொடுவாவ தோட்டத்தில் மணல் அகழ்வுக்காக தனியார் நிறுவனத்திற்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பணியகத்தினால் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்த காரரினால் 36531 முதல் 45561 கியூப் வரையிலான மணலை அகற்றியுள்ளபோதும், 1564 கியூப் மணலுக்கு மாத்திரமே அரசுரிமையாக 686,464 ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ஜீ.எஸ்.எம்.பி டெக்னிகல் சேர்வயர் (தனியார்) நிறுவனத்தினால் 2024 டிசம்பர் 19ஆம் திகதி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மணலின் அளவு மதிப்பீட்டு அறிக்கையின்படி இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு அமைய 12 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசுரிமை இழக்கப்பட்டிருப்பதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், கருங்கல்லை உடைக்கும்போது கல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள வெடிபொருட்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு குறித்த கல்குவாரிக்கான அரசுரிமை அறவிடப்படுகின்றமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அகற்றப்படும் கருங்கல்லின் உண்மையான அளவைக் கணக்கிட முடியாது என்றும், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுகிறது என்றும் குழு சுட்டிக்காட்டியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கருங்கல் குவாரிகள் மூலம் கருங்கல் பெரிய அளவில் உடைக்கப்பட்டாலும் அரசுக்கு சிறிய அளவு வருமானம் மட்டுமே கிடைக்கிறது என்பதை குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு அமைய அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது மாத்திரமன்றி, அதனை கண்காணிப்பதற்கு வலுவான பொறிமுறையொன்றை தயாரிக்க வேண்டும் என்றும், சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோப் குழு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளை வலியுறுத்தியது.
கனிம வளங்களை பிரித்தெடுப்பதற்கு முன்னர் ஆய்வு அனுமதிகளை வழங்குவதற்கான பொறிமுறையில் உள்ள கடுமையான குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தற்போதைய அமைப்பின் கீழ் ஆய்வு அனுமதிகளைப் பெறும் பல நிறுவனங்கள் அந்த அனுமதிகளை மற்ற நபர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், உண்மையில் ஆய்வு மற்றும் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தெரியவந்தது.
ஆய்வுக்குப் பின்னர் தரவு பணியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதன் துல்லியத்தில் கடுமையான சிக்கல் உள்ளது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
1993 முதல் பணியகம் 450 க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கு அனுமதிகளை வழங்கியுள்ளது என்றும், அவற்றில் 43 தற்போது செயற்பாட்டில் உள்ளன என்றும் தெரியவந்தது.
இதற்கு அமைய தற்பொழுது காணப்படும் நடைமுறையின் ஊடாக சரியான முறையில் விஞ்ஞான ரீதியான அகழ்வுப் பணிகள் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்றும், இந்நாட்டின் கனிம வளங்கள் குறித்த ஆய்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னர் அதன் செயற்பாடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கு முறைமை இல்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்படி, மேலோட்டமான தீர்வுகளுக்குப் பதிலாக, நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு புதிய வழிமுறை மற்றும் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
