டொமினிகன் நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற இரவு விடுதியின் கூரை இடிந்து வீழ்ந்ததில், 79 பேர் பலியாகியுள்ளதுடன் 160 பேர் வரை காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட மெரெங்கு இசை நிகழ்ச்சியின் போதே இந்த சம்பவம் நேற்று 08ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து இடிபாடுகளில் உயிர் பிழைத்தவர்களை, தமது குழுவினர் தேடி வருவதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இரவு விடுதியின் மேற்பகுதி இடிந்து கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகும், மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்டெடுத்துள்ளனர்.
இறந்தவர்களில் டொமினிகனின் வடமேற்கு மாகாணமான மான்டெக்ரிஸ்டியின் ஆளுநரும் ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினர் பிரே வர்காசும் காயமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
கூரை இடிந்து வீழ்ந்ததற்கான காரணம் அல்லது குறித்த கட்டடம் கடைசியாக எப்போது ஆய்வு செய்யப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.