தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை!

பண மோசடி வழக்கில், தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலா   2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசிடம் இருந்து சுமார் ரூ.2 கோடி வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடைபெற்றதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா, அவரது மனைவி ஹெரேடியா ஆகியோர் மீது தலைநகர் லிமாவில் உள்ள நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே 2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து ஒல்லாண்டா உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது மனைவி ஹெரேடியா பெருவில் உள்ள பிரேசில் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார். அங்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த தண்டனையை எதிர்த்து ஒல்லாண்டா ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்யவுள்ளனர்.

அந்த வழக்கில் ஹெரேடியா பிரேசிலில் இருந்து கொண்டே காணொலிக்காட்சி மூலம் ஆஜராவார் என அவரது சட்டத்தரணி வில்பிரடோ பெட்ராசா கூறினார்.

Exit mobile version