மத்திய கிழக்கின் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை குறித்து இலங்கை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் இலங்கை கவலை தெரிவித்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சமூகம் உட்பட கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச புலம்பெயர்ந்தோர் இப்பிராந்தியத்தில் வசிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் இலங்கைக்கு மிகவும் முக்கியமான விடயமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, சிவில் உட்கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக இலங்கை உறுதியாக நிற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான நிலைமை தீவிரமடைவதைத் தவிர்க்கும் வகையில் அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்துடன் செயற்படுமாறும், பயனுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
