பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு “தெரணாபிவந்தனா” உன்னத பொசன் வழிபாட்டு நிகழ்வு இன்று (29) நாள் முழுவதும் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் நடைபெறுகின்றது.
இந்த பௌர்ணமி தின விசேட நிகழ்வினை, ‘டிவி தெரண மற்றும் ‘எஃப் எம் தெரண’ ஊடாக உங்களுக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அநுராதபுரம் நகரத்தை மையமாகக் கொண்டும் பல விசேட சமய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அநுராதபுரம் நகரத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பொசன் காலத்தில் அநுராதபுரம் நகரத்திற்கு வருகை தரும் பக்தர்கள் எவ்வித அசெளகரியங்களுமின்றி தங்களது வழிபாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ‘மனுசத் தெரண’வுடன் இணைந்து டிஜிட்டல் வழிகாட்டலொன்றை உருவாக்கியுள்ளது.
“posonvandana” எனும் மொபைல் செயலி ஊடாக, வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தன்சல்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பல தகவல்களை பக்தர்கள் அறிந்துகொள்ள முடியும். ( https://posonvandana.lk/ )
இதேவேளை, பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இதுவரையில் 18,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் செயலாளர் சமில் முத்துகுட தெரிவிக்கையில், கடந்த 27ஆம் திகதி பிற்பகல் வரையில் நாடளாவிய ரீதியில் 18,129 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அநுராதபுர புண்ணிய பூமிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், குப்பைகளை முறைப்படி அகற்றி புனித நகரத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு பங்களிப்பு செய்யுமாறு பொசொன் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, அநுராதபுரம் பகுதிக்கு வருகை தரும் பக்தர்கள் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை முறைப்படி அகற்றுவதற்காக, குப்பைப்பைகளை விநியோகிக்கும் திட்டமொன்றை ‘மனுசத் தெரண’ நிறுவனம் மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது.
இன்றும் (29) நாளையும் (30) நடத்தப்படும் தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், பொசன் வலயங்களைச் சுற்றியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தற்காலிக வர்த்தக நிலையங்களும் பொசன் வாரம் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
